இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளில் பல கிளைகளைக்கொண்ட பிரபல சைவ உணவகங்களில் ஒன்றாக அறியப்படும் சரவணபவன் நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குநர் சிவகுமார் ராஜகோபால் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் கொலைமிரட்டல் மற்றும் உடல்சார்ந்த வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் நேற்று (10) பகல் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்காலிக பயணத்தடை
இதனால் அவர் மீண்டும் பிரித்தானியாவில் இருந்து புறப்படமுடியாத ஒரு தற்காலிக பயணத்தடையுடன் வழக்கை எதிர்கொள்ளவேண்டி வந்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வருட இறுதியில் லண்டனில் வைத்து தனது மனைவி மீது சிவகுமார் கடுமையான தாக்குதலை நடத்தி கடும்காயங்களை ஏற்படுத்திய நிலையில் லண்டன் காவற்துறையினரால் தேடப்பட்ட அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறி, டுபாய்க்கு சென்றதாகக் கூறப்பட்டது.

அதேபோல பிரான்சில் உள்ள சரவணபவனின் போட்டி நிறுவனமான ஆரியபவனின் சமையல்காரர்களில் ஒருவரை சிவகுமார் சுவிற்சலாந்தின் சூரிச்சுக்கு பலவந்தமாக கொண்டுசென்று சரவணபவன் கிளையில் பணிபுரிய வைத்தாகவும் அதன் பின்னர் குறித்த நபரை சுவிஸ் காவற்துறை அவரை மீட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கும் அப்பால் லண்டன் வெம்பிலி மற்றும் டுட்டிங் பகுதியில் உள்ள சைவ உணவகமான ஆரியபவானின் கிளைகளுக்கு சென்று சில சமையல்காரர்களை அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டது.
தேம்ஸ் நீதவான் நீதிமன்றம்
இவ்வாறான குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ள நிலையில் மீண்டும் பிரித்தானியாவுக்கு வந்த சிவகுமார் நேற்று முன்தினம் மீண்டும் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது ஹீத்ரோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பெத்னல் கிறின் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று அவர் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரது கடவுச்சீட்டு நீதிமன்றதால் முடக்கப்பட்ட பின்னர் பிணை வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் இவர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனது நிறுவனஊழியர்களுக்கு அமெரிக்க விசா பெற முயன்ற குற்றசாட்டுகளில் கைது செய்யப்பட்டும் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிவகுமாரின் தந்தையும் சரவணபவன் நிறுவனத்தின் நிறுவனருமான அண்ணாச்சி என அழைப்படும் ராஜகோபால் தான் மூன்றாவதாக திருமணம் செய்ய பலவந்தப்படுத்திய பெண்ணின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை 2001 இல் கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த குற்றத்தில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டநிலையில் 2019 ஆம் ஆண்டு சிறையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

