ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில், ஸ்மார்ட் யூத் கண்காட்சி மற்றும் இசை
நிகழ்ச்சிக்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரால்
கையொப்பமிடப்பட்ட சுமார் 188 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகள்
விநியோகிக்கப்பட்டதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான கோப்
தகவல் வெளியிட்டுள்ளது.
இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் இல்லாமல் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து
இந்தக் காசோலைகளில் முன்னாள் தலைவர் கையொப்பமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
குழுவின் விசாரணையின்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளில் திறைசேரிக்கு
கிடைத்த சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள காசோலைகள், இதன்போது
விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணர்திறன் வாய்ந்த பிரச்சினை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமை கணக்கியல் அதிகாரியாக, குறித்த
சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்தவர், தமது சாட்சியத்தின்போது, முன்னாள்
தலைவரின் பரிந்துரையின் பேரில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் தமக்கு
ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இதற்கு இணங்கத் தவறினால், இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்ற
அச்சத்திலேயே இந்த காசோலை மோசடி இடம்பெற்றதாகவும் குறித்த அதிகாரி
குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த சமரவீர,
இது மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவரை கோப் குழுவிற்கு
அழைப்பதற்கும், விவாதங்களுக்காக குழுவை திரும்ப அழைப்பதற்கும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.

