கனடாவில் தொழில் வாய்ப்பு தருவதாகக்கூறி இளைஞர்களை ஏமாற்றி நான்கு கோடியே 63 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (26) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக கிட்டத்தட்ட நாற்பது முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் நேற்று (25) கைது செய்யப்பட்டதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விடுத்துள்ள கோரிக்கை
சந்தேகநபர் 2017ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், சந்தேகநபருக்கு எதிராக இன்னும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை அவரது பெயர் குறிப்பிடும் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.