கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி, ஏற்கனவே உளவியல் ஆலோசனையைப் பெற்று வந்துள்ளதாக பெற்றோர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை 2ஆம் திகதி கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் நெருங்கிய தோழி இவர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி நெருங்கிய நண்பியும், நண்பரும் உயிரிழந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது கடுமையான மன உளைச்சளுக்கு உள்ளாகியிருந்ததாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவியின் இறுதிச்சடங்கு
அத்துடன், வகுப்பறையில் தனிமையிலிருந்து வந்த நிலையில், அவரது கல்விக்குத் தடை ஏற்பட்டிருந்ததாகவும், குடும்ப அங்கத்தவர்களுடனான தொடர்பையும் குறைத்துள்ளதுடன், உணவு உண்பதையும் தவிர்த்து வந்ததாக அவரது பெற்றோர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த மாணவியின் பிரேதப் பரிசோதனையில், பலத்த காயங்கள் காரணமாகக் குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவியின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.