தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வந்துவிட்டார் என்ற அச்சத்தில் காவல் கூண்டொன்றுக்கு தீ வைத்த பாதுகாப்பு ஊழியர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (19) இந்தச் சம்பவம் கொழும்பை அண்மித்த மஹரகம நகரில் நடைபெற்றுள்ளது.
பாதுகாப்பு நோக்கம்
மஹரகம நகரில் முக்கிய தனியார் வர்த்தக வங்கியொன்று உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டடமொன்றின் காவல் கூண்டு ஒன்றே அதன் பாதுகாப்பு ஊழியரால் இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு ஊழியர் நேற்றைய தினம் விடுமுறை என்பதால் அதிகளவில் மதுபானம் அருந்தியுள்ளார். மதுபோதையில் தமது காவல் கூண்டுக்குள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்துள்ளதைப் போன்ற தோற்றம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அவர் காவல் கூண்டுக்குத் தீ வைத்துள்ளார்.
தீ அனர்த்தம்
எனினும் தீ அனர்த்தம் குறித்த தகவல் கிடைத்தவுடன் மஹரகம நகர சபையின் தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தியுள்ளன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கட்டிடத்தின் பாதுகாப்பு ஊழியரை கைது செய்துள்ளனர்.
அவர் அதிக மதுபோதையில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.