1989இல் தெற்கில் ஜே.வி.பி. எழுச்சியின் போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும்
கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு
இன்று(27.10.2025) சீதுவை – ரத்தொலுகமவில் நடைபெறவுள்ளது.
அதனைத்
தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார ஆகியோரிடம் மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளன.
நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு
1989 ஆம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) எழுச்சியின்போது அதன்
செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவங்களுக்கு மத்தியில் 1989 ஆம்
ஆண்டு சுதந்திர வர்த்தக வலய ஊழியரும் தொழிற்சங்கவாதியுமான எச்.எம்.ரஞ்சித்
மற்றும் அவரது சட்டத்தரணி ஆகிய இருவர் கொல்லப்பட்டதன் பின்னர், அவர்களது
உடல்கள் சீதுவை – ரத்தொலுகம பகுதியில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து அவர்களை நினைவுகூரும் வகையில் சீதுவை – ரத்தொலுகம சந்தியில்
நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபி, பின்னாளில் தெற்கில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரை நினைவு கூருவதற்கான நினைவுத் தூபியாக மாற்றமடைந்தது.
அதன்படி தெற்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கி வரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் பங்கேற்புடன்
வருடாந்தம் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி இந்தத் தூபிக்கு அருகில் நினைவுகூரல்
நிகழ்வு நடைபெறும்.
அதற்கமைய இன்று காலை10.00 – 11.15 மணி வரை சீதுவை – ரத்தொலுகமவில் உள்ள
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுத் தூபிக்கு முன்பாக நினைவுகூரல்
நிகழ்வொன்று ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த நினைவுகூரல் நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்குக் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தால் கடிதம்
அனுப்பிவைக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கடிதத்துக்கு எவ்வித பதிலும்
கிடைக்காததன் காரணமாக, தமது கோரிக்கைகளை உள்ளடக்கி இன்று ஜனாதிபதியிடம்
மகஜரைக் கையளிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த ஒன்றியத்தின் தலைவர்
பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று நண்பகல் 12.00 – 1.30 மணி வரை நீதி அமைச்சுக்கு முன்பாக
கவனவீர்ப்புப் போராட்டத்தை நடத்தியதன் பின்னர் நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவிடமும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 – 3.00 மணி வரை ஜனாதிபதி
செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டதன் பின்னர்
ஜனாதிபதியிடமும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்படும் என்று
பிரிட்டோ பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.

