கொழும்பு(colombo) தேசிய மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக நோயாளிகள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு செலுத்தப்படும் இன்சுலின் தேசிய மருத்துவமனை கிளினிக்கில் உள்ள நோயாளிகளுக்கு கூட வழங்கப்படுவதில்லை என்றும், நாடு முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகளில் சுமார் மூன்று மாதங்களாக இன்சுலின் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் இருப்பதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
நீரிழிவு நோயாளிகளுக்கு செலுத்தப்படும் இன்சுலின்
இன்சுலின் ஊசி போடும் சில நோயாளிகள் அதை வாங்க பணம் இல்லாததால் பெரும் சிரமத்தை அனுபவிப்பதாகவும், சில பகுதிகளில் உள்ள தனியார் மருந்தகங்களில் இன்சுலின் பற்றாக்குறையால் தாம் மேலும் சிரமப்படுவதாகவும் நோயாளிகள் கூறுகின்றனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள நீரிழிவு சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகள், இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இன்சுலின் இருக்கிறதா என்று விசாரிக்குமாறு மருந்து வழங்கும் கவுண்டர்களால் அறிவுறுத்தப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.
மருந்துகள் கையிருப்பில் இல்லை
மருத்துவ விநியோகத் துறையிலும் அரசு மருத்துவமனைகளிலும் 13 உயிர்காக்கும் மருந்துகளில் மூன்று முற்றிலும் கையிருப்பில் இல்லை என்றும், மருத்துவ விநியோகத் துறையில் 460 அத்தியாவசிய மருந்துகளில் 183 மருந்துகளும், 49 மருத்துவமனைகளிலும் முழுமையாக மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ்(ravi kumuthesh) தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்த தேசிய மருந்துச்சீட்டு மறுஆய்வுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 612 மருந்துகளில் 13 உயிர்காக்கும் மருந்துகள், 460 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 139 அத்தியாவசியமற்ற மருந்துகள் என்று குமுதேஷ் கூறினார். மருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தவறியதால் எழும் அவசரத் தேவை, பதிவு செய்யப்படாத, தரமற்ற மற்றும் போலியான மருந்துகளை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.