கடந்த வருடம் நெல் உற்பத்தியில் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் பற்றாக்குறை ஏற்பட்டமையே அரிசி பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என அரச கணக்குகள் பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இந்த விடயம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.
சாதாரணமாகப் பெரும்போகத்தில் 4.39 மில்லியன் மெட்ரிக் தொன்னும், சிறுபோக பருவத்தில் ஒரு மில்லியன் மெட்ரிக் தொன்னுமாக நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.
நெல் உற்பத்தி
எனினும், கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டில் வருடம் முழுவதும் 4.3 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறு உற்பத்தியில் குறைவு ஏற்பட்டமைக்கு பருவநிலை மாற்றம் பிரதான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், சில தரப்பினர் நெல்லை கொள்வனவு செய்து சேமித்து வைத்திருந்ததாகவும் அரச கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் தெரியவந்துள்ளது.