கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் காலங்காலமாக வசித்துவரும் மக்களுக்கான காணி உறுதிகளை, பாகுபாடற்ற முறையில் வழங்கி வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) கோரிக்கை விடுத்துள்ளார்.
முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதம் சார்ந்து உரையாற்றிய போதே அவர் மேற்படி கோரிக்கையைப் பதிவுசெய்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, ”யாழ்ப்பாணத்தின் (Jaffna) பல்வேறு பகுதிகளிலிருந்தும் யாழ்.திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசாலை, வட்டக்கச்சி அரசினர் விவசாயப் பாடசாலை, கண்டி குண்டகசாலை அரசினர் விவசாயப் பாடசாலைகளில் கல்விகற்றவர்களையும், அக்காலத்தில் 8ஆம் வகுப்பு சித்தியடைந்தவர்களையும்,1930 களிலும், அதன் பின்னர் 1950களிலும் விவசாயத்தை மையப்படுத்தி குடியேற்றியதன் மூலம் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில், 1983 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளின் பாதிப்புகளால், தமது உடைமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் இடம்பெயர்ந்த மலையக மக்களும் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள்.
குடியேற்றக் கிராமங்கள்
கிளிநொச்சியின் முதலாவது குடியேற்றக் கிராமமாக 1930இல் கணேசபுரம் குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் 1950, 1953 மற்றும் 1954 இல் வட்டக்கச்சி படித்த வாலிபர் குடியேற்றத்திட்டம், உருத்திரபுரம் படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம், இராமநாதபுரம், அக்கராயன், வன்னேரிக்குளம் மற்றும் பூநகரி, முழங்காவில் உள்ளிட்ட குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கம் பெற்றிருந்தன.
அவ்வாறு குடியேறியவர்கள் காடுவெட்டிக் களனியாக்கி, பரம்பரை பரம்பரையாகவும் ஆட்சியுரிமை ரீதியாகவும் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்துவரும் காணிகளுக்கான உரித்தை உறுதிசெய்யக்கூடிய காணி உறுதிகள் இதுவரை வழங்கப்படவில்லை.
குறிப்பாக கிளிநொச்சியின் நகரசபை எல்லையாக குறித்துரைக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள உதயநகர், கணேசபுரம், கிளிநொச்சி நகரம், இரத்தினபுரம், திருவையாறு கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான குடியிருப்பாளர்களுக்கும் இதுவரை காணி உறுதிகள் வழங்கப்படவில்லை.
அரச உத்தியோகத்தர்களுக்கு சிக்கல்
தற்போது உறுதிகளை வழங்குவதற்கான பூர்வாங்கச் செயற்பாடுகள் அமைச்சு மற்றும் திணைக்கள மட்டங்களால் முன்னெடுக்கப்படுகின்ற போதும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சாதாரண நடைமுறைகளுக்கு உட்பட்டு உறுதிகளை வழங்கமுடியாதெனவும், அவர்கள் தமது சொந்தக் காணிகளை பெருந்தொகைப் பணம் செலுத்தி நீண்டகாலக் குத்தகை அடிப்படையிலேயே பெறமுடியும் எனவும் நிர்ப்பந்திக்கப்படுவது மிகமோசமான பகற்கொள்ளை போன்ற செயலாகவே தென்படுகிறது.
தம்மிடமிருந்த சிறுசிறு சேமிப்புகளை எல்லாம் முதலீடாக்கி, கடன்களைப் பெற்று தமது குடியிருப்புக் காணித் துண்டுகளில் நிரந்தர வீடுகளை அமைத்த சாதாரண விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்கள், தமது காணிகளுக்கான உறுதிகளைப் பெறுவதற்கு அரசாங்கத்துக்கு பல இலட்சக் கணக்கில் பணம் செலுத்த வேண்டுமென்ற நடைமுறை, அவர்களின் அடிப்படை இருப்பையே நசுக்கக்கூடிய செயற்பாடாகும்.
எனவே, கிளிநொச்சி மாவட்ட மக்கள் காணி உறுதிகளைப் பெறுவதில் எதிர்கொள்கின்ற இத்தகைய இடர்பாடுகள் சீர்செய்யப்பட்டு உத்தியோகத்தர்கள், சாதாரண பொதுமக்கள் என்ற பாகுபாடுகளற்று அனைத்து மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ என தெரிவித்தார்.