இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சபை இன்று (19) கூடுகின்ற போது குறித்த நிதி வசதியை வழங்குவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டை எட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘டித்வா’ (Ditwa) புயலினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்காக, 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி வசதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அவசர நிதி வசதி கோரிக்கை
அதன்படி, தற்போது சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதிக்கு (EFF) மேலதிகமாக இந்த அவசர நிதி வசதி வழங்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் 5வது மீளாய்வு நிறைவடைந்துள்ளதுடன், அதற்கான அங்கீகாரத்தை வழங்குவதற்காக நிறைவேற்று சபை கடந்த டிசம்பர் 15ஆம் திகதி கூடவிருந்தது.
எனினும், இந்த புதிய அவசர நிதி வசதி கோரிக்கை காரணமாக அந்தக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், இன்று கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, குறித்த 5வது மீளாய்வு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

