நாட்டில் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளது.
இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டெம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
டிஜிட்டல் தரவு முறைமை
சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சொத்து வரி விதிப்பு முறைகள் குறித்து ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
அந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.