இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலக தலைவர், கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது குழுவினர் சட்டவிரோத முறையில் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரால் இலங்கையில் பல அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் சட்டவிரோத நிதியால் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தனி விசாரணை
அத்தோடு, கமாண்டோ சலிந்த என்பவருடன் தொடர்புடைய சொத்துக்களையும் மையப்படுத்தி தனி விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் குறித்த சந்தேகநபர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு காவல்துறையினர் குழுவொன்று புறப்பட உள்ளது.
கடுமையான பாதுகாப்பில் இலங்கைக்கு
ஏற்கனவே இந்தோனேஷியாவில் பணியாற்றி வரும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், கைதானவர்களை கடுமையான பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்தக் குழு நாளை(31) பிற்பகல் இலங்கையை அடையும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர் பெக்கோ சமன் என்பவரின் மனைவியும் குழந்தையும் நேற்று (29) பிற்பகல் இலங்கைக்கு வந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

