இலங்கை விவசாய துறை, கடற்தொழில் துறை மற்றும் கைத்தொழில் துறை முதலியவற்றில் நீண்ட தூரம் வளர்ச்சி காண வேண்டியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த துறைகளில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் அவரது முதலாவது உரையை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”ஊழலற்ற, இனவாதமற்ற, மதவாதமற்ற
மற்றும் வெளிப்படைத்தன்மையான ஒரு ஆட்சியை நடத்த உள்ளதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஜனாதிபதி கூறியவாறான ஆட்சியை சொல்லில் மட்டுமின்றி இந்த அரசு
செயலிலும் காட்ட வேண்டும்.
அரச சேவையினை மாற்றுதல்
மேலும் அரச சேவையினை வினைத்திறன் உள்ளதாக மாற்றப் போவதாகவும் சட்ட ஆட்சியை நிலைநாட்டப்
போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அரச சேவையினை உலகத்தரத்திற்கு உயர்த்தினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற
பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 139 குடிமக்களுக்கு ஓர் அரச ஊழியர்
இருந்தார், இன்று 13 பேருக்கு ஓர் அரச ஊழியர் காணப்படுகின்றார் என
கூறப்படுகின்றது.
எனவேதான் அரச சேவையினை ஒழுங்குபடுத்தி மீளமைக்க வேண்டும்.
அதேபோன்று வேளாண்மை துறை, கடற்தொழில்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை
ஆகியவற்றில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான
சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும்.
எமக்கு அயலில் உள்ள இந்திய
மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம்
விவசாயத்துறை மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பணி அளப்பரியது என்பதனை நாம் எண்ணிப்
பார்க்க வேண்டும். அதேபோன்ற பல்கலைக்கழகங்கள் இந்த நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.
அதேபோல கணனி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள
அண்ணா பல்கலைக்கழகமும், ஐஐடி என்று அழைக்கப்படுகின்ற இந்திய தொழில்நுட்ப
நிறுவனமும் ஆற்றி வரும் பணிகளையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை
ஜனாதிபதி கூறியபடி கல்வித்துறையினை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றல்
கற்பித்தல் முறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளதுடன்
ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்க்கும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித
ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி
ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ்
ஆசிரியர் பற்றாக்குறையும் என ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை
காணப்படுகின்றது. இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆசிரியர்
பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரிய ஆளணியை மாவட்டத்திற்கு ஒதுக்கித்
தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப்பங்கீடு சரியான முறையில் அமையவில்லை.
ஆசிரியர் நியமனத்தின் பொழுது பெரும்பாலான ஆசிரியர்கள் திருகோணமலைக்கு
வருகின்றார்கள், வந்து சில காலங்களில் தத்தமது மாவட்டங்களுக்கு இடமாற்றம்
பெற்றுக் கொண்டு சென்று விடுகின்றார்கள்.
இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கல்வியற் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது
பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர்
பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்த சிக்கலை தீர்க்கலாம்.
கல்வி அமைச்சு பின்பற்றுதல்
உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர்
பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளரின் பிரிவுகளில்
உள்ளவர்களையே நியமிக்கின்றது. இதே முறையை கல்வி அமைச்சும் பின்பற்றினால்
ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணலாம்.
மேலும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித்துறைக்கு
2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 1.3 வீதமான நிதியும் 2024இல் 1.5
வீதமான நிதியுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் குறைந்தது 5 வீதமாக ஆவது உயர்த்த
வேண்டும்.
மேற்குலக நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5 வீதத்துக்கும் கூடுதலான
தொகையினை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதனையும் தங்கள் மேலான கவனத்திற்கு
கொண்டு வருகின்றேன்.
முன்னுரைத்தவாறு ஜனாதிபதி பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், நீண்ட காலமாக இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டான முன்மொழிவுகள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை என்பது கவலை தோய்ந்த செய்தியாகும்.
“சொல்லாமலே செய்வர் பெரியார் “ என்னும் முதுமொழிக்கு அமைய ஜனாதிபதி இச்சிக்கலுக்கு ஒரு நிலையான தீர்வினை காண்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.” என தெரிவித்தார்.