சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்க்கட்சிகளிலுள்ள பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் குறித்த அரசியல்வாதிகள் பங்கேற்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் இந்த வாரம் இலங்கை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும், அந்த அறிக்கையுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளர்
இந்த நிலையில், நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளன.
எனினும் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஓரளவு மீண்டு வரும் வரையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை, அறிவிக்காமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது அரசாங்கம் என்பன காலதாமதித்து வருவதாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் தேசிய கட்சிக்கு சிக்கல் நிலை ஏற்பட்டது.
பொருளாதார ஸ்திரமின்மை
எவ்வாறாயினும், இந்த வாரத்திற்குள் இந்த விடயங்களுடன்,கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிளவுகளும், தாவல்களும் அமைச்சரவையில் சில மாற்றங்களும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .
குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட குழுவினர், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
நாடு முழுவதும் பல தொடர் மாநாடுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது கூட்டம் மாத்தறையில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய கூட்டணி
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தன்னைச் சுற்றி புதிதாக ஒன்றிணைந்த குழுவுடன் இணைந்து புதிய கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், அந்த கூட்டணியை பலப்படுத்த ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.