புதிய இணைப்பு
நாளைய தினம் (13) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா? இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
தடங்கல் ஏற்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின்நிலைய செயற்பாடுகள் தற்போதைக்கு சீரமைக்கப்பட்டு வருகின்றது.
அதன் காரணமாக நாளைய தினம் குறித்து இன்றே அறிவித்தல்கள் விடுக்க முடியாது.
நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாயின், அது குறித்த நாளை காலையில் அறிவிக்கப்படும் என்றும் மின்சார சபை தொடர்ந்தும் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சீர்குலைவின் காரணமாக நேற்று (11) மற்றும் நேற்று முன்தினம் (10) ஆகிய நாட்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
முதலாம் இணைப்பு
நாளையதினம் முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இன்று பிற்பகல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போயா தினம் காரணமாக இன்றையதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என முன்னர் அறிவிக்கப்பட்டது.
மீண்டும் மின்வெட்டு
இந்தநிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வரை செயலிழந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நாளை முதல் மீண்டும் மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக தகவல்: அனதி