இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் பின் தள்ளி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), நாளை (22) காலை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பான பதவியேற்பு நிகழ்வு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
அதனை தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
நாடாளுமன்ற கலைப்பு
மேலும், இக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத், நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன.
இதேவேளை, சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
அத்தோடு, இரண்டொரு நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.