இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான சந்திப்பின் போது கடற்றொழில் நடவடிக்கைகள் தொடர்பில் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
முக்கிய துறைகள்
மேலும், குறித்த சந்திப்பின்போது கல்வி, பெண்கள் அதிகாரம், புத்தாக்கம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன் ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்திப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்தத் துறைகள் நீடித்த வளர்ச்சி மற்றும் பரஸ்பர முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்று இரு தரப்பினரும் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் நீடித்த உறவுகள், தங்கள் நாட்டு மக்களின் மற்றும் பரந்த தெற்காசிய பிராந்தியத்தின் செழிப்புக்கு முக்கியப் பங்கு வகிப்பதை அங்கீகரித்து, பல முனைகளிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு பிரதமர்களும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.