ஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியற் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றையதினம் (26.10.2024) தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சி
இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், “தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலை மாறவேண்டுமானால், தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத்தேவை எழுந்துள்ளது.
உட்கட்சி முரண்நிலை
உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக்கடமை எமக்கு தரப்பட்டுள்ளது.
கொள்கைரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத்தமிழர்களின் அரசியல்வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும்
உழைப்பேன்” என தெரிவித்துள்ளார்.