அமெரிக்க வர்த்தக பிரதிநிதகளுக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற சுமூகமான பேச்சுவாரத்தை தொடர்பான அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கை பிரதிநிதிகள் குழு ஒன்று ஏப்ரல் 22, 2025 அன்று வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீரை சந்தித்துள்ளது.
இதன்படி, நிதி அமைச்சராகவிருக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை பிரதிநிதிகள் குழு, இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் கிரீருக்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்புகளின் மூலங்களை ஒப்படைத்துள்ளது.
அமெரிக்கா பாராட்டு
அதில் கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எதிர்கால சவால்களை சமாளித்து முழு பொருளாதார மீட்சியை நோக்கி நகர இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தூதர் கிரீருக்கு தூதுக்குழு தெரியப்படுத்தியுள்ளது.
அத்துடன், வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதிலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் குறைப்பதிலும் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கத்தின் உடனடி மற்றும் நேர்மறையான உறுதிப்பாட்டை இலங்கை பிரதிநிதிகள் குழு எடுத்துரைத்துள்ளது.
இதனை தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக இலங்கை முன்வைத்த முன்மொழிவுகளுக்கு தூதர் கிரீர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இருதரப்பு ஒப்பந்தம்
இதேவேளை, நியாயமான மற்றும் சமமான வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், அன்றையதினமே இலங்கை பிரதிநிதிகள், அமெரிக்காவிற்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய நிவாரணங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குப் பொறுப்பான உதவி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான தூதர் கிரீர் நியமித்த USTR குழுவையும், தெற்காசியாவிற்குப் பொறுப்பான இயக்குநர் எமிலி ஆஷ்பியையும் சந்தித்துள்ளனர்.
அதன்படி, ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் இறுதி செய்ய இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அரசாங்க அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.