மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கம்பகா(gampaha) மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் இந்திரா மல்வான, மாவட்ட சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகளை முன்வைத்து இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 இல் 290 சிறுவர்கள் விபரீத முடிவு
“சிறுவர்களிடையே மனச்சோர்வு ஒரு ஆபத்தான நிலை. இங்கே தீவிரம் தற்கொலை. கடந்த 2024 ஆம் ஆண்டு கம்பகா மாவட்டத்தில் இவ்வாறு தற்கொலை செய்த 290 சிறுவர்கள் பதிவாகியுள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட அதிகமாகும்.
நாட்டின் சனத்தொகையின் பிரகாரம் கம்பகா மாவட்டத்தில் அதிக சனத்தொகை காணப்படுவதனால் இம்மாவட்டத்தில் அதிகளவு சிறுவர் தற்கொலைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எச்.ஐ.வி பாதிப்பும் அதிகம்
மாவட்டத்தில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அம்மை நோயும் அதிகரித்துள்ளது. இறப்புகள் அதிகம், பிறப்புகள் குறைவு.
51 சதவீத பிரசவங்கள் அறுவைச்சிகிச்சை மூலம் நடப்பதால், செலவு அதிகரிக்கிறது. குழந்தை ஊட்டச்சத்து மோசமாக உள்ளது. 15 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.