தமிழ் பொது வேட்பாளர் களமிறங்குவதற்கு தென்னிலங்கை ஆட்சியாளர்களே காரணம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்கள் இதுவரைக்கும் எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களித்திருக்கின்றார்கள்.
குறைந்த பட்சம் எட்டு தேர்தல்களிலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தென்பகுதியிலுள்ள ஜனாதிபதி அல்லது ஜனாதிபதி வேட்பாளர்கள் இதுவரைக்கும் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பௌத்த மயமாக்கல்
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தாலும் வடக்கு கிழக்கில் பல்வேறுபட்ட நில அபகரிப்புகள், பௌத்த மயமாக்கல் போன்ற நிலைமைகள் தொடர்கின்றன.
ஆகவே இந்த நிலையிலிருந்து கடந்த 75 வருட காலமாக தோற்றுப் போன அரசியல் இராஜதந்திரம் தென்பகுதி தலைவர்களிடமிருந்து தமிழ் தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் அவர்களுடன் ஒரு இணக்க அரசியலை செய்கின்றோம் அல்லது பேரம் பேசுகின்றோம் என்ற பெயரால் நடந்து கொண்ட இந்த அரசியலானது தமிழ் மக்களினுடைய அல்லது தமிழ் தலைவர்களினுடைய பெரிய இராஜதந்திர தோல்வியாக தான் நாங்கள பார்க்கின்றோம்.
கடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்து தான் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற நிலைமைக்கு தமிழர்களை தள்ளியிருப்பது தென்பகுதியில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தான். தென்பகுதியில் மாறி மாறி ஆட்சி செய்த தலைவர்கள் தான் தமிழ் மக்களை இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கிறார்கள்.“ என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க……..
https://www.youtube.com/embed/1xZEXIdSWi4