ஜனாதிபதி தேர்தலின் போது உருவாக்கப்பட்ட பொது கட்டமைப்பானது 7 தனிநபர்களை
கொண்ட அமைப்பு என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை
இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் முன்வைத்த கருத்து காரணமாக வவுனியாவில் இடம்பெற்ற
கூட்டம் ஒன்றில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மாற்றத்துக்கான மாற்று வழி
என்னும் கருப்பொருளில் வவுனியா, வாடி வீட்டில் சிவில் அமைப்புக்கள் மற்றும்
செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர்
வி.எஸ்.சிவகரன், எல்லா மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் கட்டமைப்பு ஒன்றை
உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமைப்பு
இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட
பலரும் ஏற்கனவே கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது
கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். பிறகு எதற்கு வேறு அமைப்பு என கேள்வி
எழுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, பதிலளித்த சிவகரன், ”பொது கட்டமைப்பு என்பது 7 தனிநபர்களை கொண்ட
அமைப்பு. அவர்களுக்கு பின்னால் எந்த அமைப்பும் இல்லை. அவர்கள்
செயற்பாட்டாளர்களே தவிர அமைப்புக்கள் அல்ல. நாம் அமைப்புக்களை உள்ளடக்கி இதை
உருவாக்குவோம்.
அவர்களுடனும் தேவை எனில் பேசுவோம். அங்கும் எமக்கு
தெரிந்தவர்களே உள்ளனர். நிலாந்தன், ஜதீந்திரா, கணேசலிங்கம், விக்கினேஸ்வரன் என
7 பேர் உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
முரணான கருத்து
இந்நிலையில், குறித்த செயற்பாட்டில் உடன்படவில்லை எனத் தெரிவித்து வவுனியாவைச்
சேர்ந்த சிவில் மூக செயற்பாட்டளர்கள், அமைப்புக்கள் பலர் அதிருப்தியை தெரிவித்து
கூட்டத்தில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
வெளியேறியவர்கள், “இவர்கள் ஒரு தீர்மானத்துடன் வந்து அதனை இங்கு
திணிக்க முயல்கிறார்கள். ஏற்கனவே பொது கட்டமைப்பு என அமைப்பு ஒன்று உள்ள
போது புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி மக்களை குழப்பியடிக்க கூடாது. அனைவரும்
இணைந்து பயணிக்க வேண்டும். அதனால் வெளியேறுகின்றோம்“ என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இக்கலந்துரையாடலில் க.அருந்தவபாலன், முன்னாள் மாகாண அமைச்சர்களான
ப.டெனீஸ்வரன், அனந்தி சசிதரன், பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்
ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.