வடக்கு, கிழக்கு தமிழ்
மக்களை புலம்பெயர வேண்டாம் என்று கேட்கும் துணிச்சல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றதா என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தந்தை செல்வா நினைவரங்கில் இடம்பெற்ற ரெலோ அமைப்பின் வீரர்கள் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சொந்த மண்ணில்
வாழ்ந்தால் தங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும்
இனிமேலாவது தமிழ் அரசியல்வாதிகள் உருவாக்க வேண்டும்.
தமிழ் மக்களின் நம்பிக்கை
“வெறுமனே தேசியவாத சுலோகங்களை எழுப்புவதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை
தமிழ் அரசியல்வாதிகளினால் இனிமேலும் வென்றெடுக்க முடியாது. உள்நாட்டுப்போரின்
முடிவுக்கு பின்னரான கடந்த 16 வருடங்களாக தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளில்
வெறுப்படைந்த காரணத்தினாலேயே தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும்
தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்தார்கள்.

தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களித்ததன் உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்டு
அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரது
அரசும் அக்கறை காட்டியிருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க்
கட்சிகளினால் மீண்டும் அவற்றின் செல்வாக்கை அதிகரிக்க முடியாமல் போயிருக்கும்.
தங்களது வாக்கு வங்கிக்குள் ஊடுருவல் செய்த காரணத்தினாலேயே ஜனாதிபதியையும்
தேசிய மக்கள் சக்தியையும் தமிழ் அரசியல்வாதிகள் தாக்கிப்
பேசுகின்றார்கள்.
தேசிய மக்கள் சக்திக்குத் தமிழ் மக்கள் வாக்களித்ததன்
காரணத்தைத் தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
நாடு பூராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட 1983 ஜூலை
இனவன்செயல்களின் 42 ஆவது வருடாந்தத்தை நாம் நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.
அந்த வன்செயல் நாட்களில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்க்
கைதிகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். அந்தப் படுகொலைகள் குறித்து
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பியபோது அன்றைய பிரதமர்
ரணசிங்க பிரேமதாஸ சிறைச்சாலை வன்முறைகளில் சிங்களக் கைதி ஒருவரும்
கொல்லப்பட்டதாகப் பொறுப்பற்ற விதமாகப் பதிலளித்தார்.
1983 ஜூலையை கறுப்பு ஜூலை என்று வர்ணித்தவர் காலஞ்சென்ற பிரபல ஆங்கிலப்
பத்திரிகை ஆசிரியர் மேர்வின் டி சில்வா. அவர் அவ்வாறு வர்ணித்த அதேவேளை அந்த
ஜூலைக்குப் பிறகு இலங்கையில் எல்லாமே கறுப்பாகத்தான் இருக்கின்றது என்று
எழுதிய சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள்.
கிறிஸ்துவுக்குப் பின், கிறிஸ்துவுக்கு பின் என்பதைப் போன்று இலங்கையின்
அரசியல் வரலாறும் கறுப்பு ஜூலைக்கு முன், கறுப்பு ஜூலைக்கு பின் என்று
பிரித்துப் பார்க்கப்படுகின்றது.
மக்களின் போராட்டம்
ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் தமிழர்களுக்கு எதிராகக்
கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்தக் கொடூரமான வன்செயல்கள் இலங்கையில் இனங்களுக்கு
இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை ஓர் எல்லைக்கோடாக அமைந்தன.
கறுப்பு ஜூலை வன்செயல்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
கோடிக்கணக்கான அவர்களது சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

ஆயிரக்கணக்கில் தமிழர்கள்
அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தார்கள். தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப்
பிரிவினைக் கோரிக்கைக்குச் சிங்கள மக்கள் வெளிக்காட்டிய இயல்பான எதிர்வினையே
அந்த வன்செயல்கள் என்று கூறி ஜனாதிபதி ஜெயவர்தன நியாயப்படுத்தினார்.
கறுப்பு ஜூலையில் அவலங்களை அனுபவித்த தமிழ் மக்களிடம் அன்றைய அரசின் எந்தவொரு
தலைவரும் மன்னிப்புக் கோரியதும் இல்லை, வருத்தம் தெரிவித்ததும் இல்லை.
கறுப்பு ஜூலைக்குப் பிறகு இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத்
தலையிட்டது. 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை அடுத்து மாகாண
சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஆனால், இந்தியாவின் அந்த தலையீட்டினதும் மாகாண
சபைகளினதும் இன்றைய நிலையை தமிழ் மக்களும் அவர்களின் அரசியல்வாதிகளும்
நினைத்துப் பார்க்க வேண்டும்.
மாகாண சபைகளுக்கு எட்டு வருடங்களாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. மாகாண சபைத்
தேர்தலை நடத்தி அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக
நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசுகளை இந்தியாவினால் கூட வழிக்குக் கொண்டுவர
முடியவில்லை.
இறுதியில் மாகாண சபைகள் கூட இல்லாத ஒரு மக்கள் கூட்டமாக தமிழ்
மக்கள் அநாதரவாக விடப்படக்கூடிய ஆபத்து இருக்கின்றது. தற்போது இலங்கை
அரசமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடான மாகாண சபையைப்
பயன்படுத்தி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தமிழ்க் கட்சிகள்
இயன்ற வரை முயற்சிக்க வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தமும் மாகாண சபைகளும் இல்லாமல் போனால் மீண்டும் அத்தகைய
ஓர் அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாட்டை அல்லது அதை விடவும் குறைந்த ஓர்
ஏற்பாட்டையாவது மீண்டும் கொண்டு வருவதற்கு அரசுக்கு நெருக்குதல்
கொடுக்கக்கூடிய மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய வல்லமை இன்றைய
தமிழ்க் கட்சிகளிடமும் அவற்றின் தலைவர்களிடமும் இருக்கின்றதா என்று கேள்வி
எழுப்பினார்.

