கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல்
ஊடக துறை மீது தொடரும் அச்சுறுத்தலின் வெளிபாடே என வவுனியா தமிழ் ஊடகவியலாளர்
சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் தமிழ்செல்வன் தாக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர்
சங்கம் நேற்று (27.12.2024) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலும் ஊடகவியலாளர்
மீதான தாக்குதல்கள், கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்ந்த வண்ணமே உள்ளன.
கடத்த முயற்சி
அதற்கு
ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் கொல்லப்பட்டமை
என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாமையே காரணம்.
அதன் நீட்சியாக ஆயுதபலம், பண பலம், அரசியல் பலம் கொண்டவர்கள் மக்கள் நலன்
சார்ந்து பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும், அவர்கள்
மீதான அடக்கு முறைகளையும் தொடர்தும் செய்த வண்ணமே உள்ளனர்.
அதனையே கிளிநொச்சி
மாவட்ட சுயாதீன சிரேஸ்ட ஊடகவியலாளரான தமிழ்செல்வன் அவர்களது தாக்குதலும்
எடுத்துக் காட்டுகின்றது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பகல் பொழுதில்
பொதுமக்கள் செறித்த பகுதியில் ஊடகவியலாளரை கடத்த முற்பட்டதுடன், தாக்குதல்
நடத்தப்பட்டமை ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் கேள்வி உட்பத்தியுள்ளதுடன்,
நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கான நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள்
கைது செய்யப்பட்டு சட்டத்தின மூலம் தண்டிக்கப்பட வேண்டும் எனவும்
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வவுனியா
தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கோருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மட்டு.ஊடக அமையமும் இதனை கடுமையாக கண்டித்துள்ளனர்.
“கிளிநொச்சியில் ஊடகவியலாளர் கடத்த முற்பட்டதுடன் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதுவரையில் தாக்குதல் மேற்கொண்டவர்கள்
கைது செய்யப்படாமையினையிட்டு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என
மட்டு.ஊடக அமையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி – குமார்