வாகன இறக்குமதி வரிகளில் ஏற்படும் உயர்வு குறித்து, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், தமது கவலைகளை எழுப்பியுள்ளது.
தற்போது இந்த வரிகள் சராசரியாக 300 வீதமாக உள்ளன.
எனினும் சங்கத்தின் கூற்றுப்படி, வாகன இறக்குமதியின் பின்னர் சில வாகனங்களுக்கு வரிகள் 400 வீதம் முதல் 500 வீதம் அல்லது 600 வீதம் வரை கூட உயரக்கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
பல அடுக்கு வரிவிதிப்பு காரணமாக வரிகளில் கூர்மையான அதிகரிப்பு ஏற்படலாம் என்று சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு இறக்குமதி
வாகனத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறப்பு இறக்குமதி வரி உள்ளது. கூடுதலாக, ஒரு சொகுசு வரி உள்ளது, மேலும் மூன்றும் CIFஎன்ற செலவு, காப்புறுதி மற்றும் பொருள் மதிப்பில் சேர்க்கப்படுகின்றன.
அதற்கு மேல், 18வீத வெற் வரி விதிக்கப்படுகிறது.
இதன் விளைவாக ஒரு வாகனத்தின் இறுதி விலையை நிர்ணயிக்க, நான்கு வகையான வரிகள் இணைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சில வாகனங்கள் மீதான வரிகள் கணிசமாக அதிகரிக்கும் என்று சங்கம் கணித்துள்ளது. உதாரணமாக, வேகன் ஆர் மீதான வரிகள் 1.6 மில்லியன ரூபாய்களில் இருந்து 1.8 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் உயரக்கூடும்.
உள்ளூர் சந்தை
விட்ஸ் மீதான வரிகள் 2 மில்லியனில் இருந்து தோராயமாக 2.4 மில்லியனாக உயரக்கூடும். டொயோட்டா அக்வா, கொரோலா மற்றும் ஆக்சியோ போன்ற வாகனங்களுக்கான வரிகள் 6.6 மில்லியனைத் தாண்டக்கூடும்.
இந்தநிலையில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு கடுமையாக உயரும் என்றபோதும், ஏற்கனவே உள்ளூர் சந்தையில் உள்ள வாகனங்களின் விலையில் சிறிதளவு அதிகரிப்பையே காண வாய்ப்புள்ளது என்று சங்கம் குறிப்பிட்டது.
அதேவேளை, அதிகரித்து வரும் வரிகள் இருந்த போதிலும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், விநியோக நிலைமை சீராகக்கூடும் என்பதால், காத்திருக்குமாறும் மானகே கோரிக்கை விடுத்துள்ளார்.