தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் (R. Sampanthan) மறைவிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கான பயணத்தில் பாரியதொரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழரசுக்கட்சியின் தலைவர்கள்
தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் வரிசையில் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் போன்ற மறைந்த அரசியல்வாதிகள் வரிசையில் சம்பந்தனும் இணைந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய முதுமையினையும் பொருட்படுத்தாது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாகப் பாடுபட்டவரான ஆர்.சம்பந்தன் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்பட்டவராக இருந்தார்.
சர்வதேச இராஜதந்திர மட்டத்திலும் மற்றும் பெரும்பான்மை அரசியல் தலைவர்களிடமும் தமிழ் மக்களுடைய விடயங்களை எடுத்தியம்பும் வகையில் தன்னுடைய அரசியலை தொடர்ந்து வந்திருந்த அவர் இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதில் ஜனநாயக வழிமுறையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தார்.
சுயநிர்ணய உரிமை
அந்தவகையில்தான் தமிழ் மக்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி சிங்கள அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாடியதுடன் 2015 ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வேளையில் அரசியலமைப்பு மாற்றத்திற்காக பாடுபட்டிருந்தார்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறைகளில் இடைவிடாது அரசியல் ரீதியாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒர் பேரிழப்பாகும்.
2001 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தலைமைதாங்கி வழிநடத்திவந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவிலும் தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களிலும் அண்மைக்காலங்களில் மனம் நொந்திருந்தார்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.