ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அழைப்பை ஏற்று தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின்
பிரதிநிதிகள் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சி அலுலகத்தில் இன்று (13) காலை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மற்றைய தரப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வட மாகாண பிரதம அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷும் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்களின் பிரச்சினை
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு, பொது வேட்பாளரைக் களமிறக்கவுள்ள நிலையிலேயே வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சஜித் பிரேமதாச பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.
இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் சஜித் பிரேமதாச தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்தனர்.
குறித்த சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் எட்டப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு வலுப்பெற்றது என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
இதுவரை காலமும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ பிரதம மந்திரியாகவோ பதவி வகிக்கக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் இம்முறை அச்சந்தர்ப்பம் வழங்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தான் முடிவு காண்பதாக சஜித் தெரிவித்தார்.
ஆகவே கடந்த கால கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்துக் கொண்டு தன்னையும் அந்த வேட்பாளர்களோடு அல்லது பதவிகளை பெற்றுக் கொண்டவர்களோடு ஒப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேட்பாளர்கள்
இந்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சகல உரிமையும் இருக்கின்றது என்பதையும் அதைத்தான் மதிப்பதாகவும் தெரிவித்த அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற உங்களுடைய நிலைப்பாட்டுக்கு தான் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனாலும் தேசிய ரீதியான தேர்தலில் இன, மொழி, மத மற்றும் பிரதேச ரீதியான அடையாளத்தோடு வேட்பாளர்கள் முன்னிலைப்படுத்துவது ஒற்றுமையை சீர்குலைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
தமிழ் மக்கள் சார்பில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, எஞ்சியுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு மற்றும் அபகரிப்பை தடுப்பது, தமிழ் இளைஞர்கள் யுவதிகள் நீதியற்ற முறையில் கைது செய்யப்படுவது, விசாரணை என்ற போர்வையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் நடவடிக்கையை நிறுத்துதல், இந்திய மீனவர்களுடைய அத்துமீறலினால் எமது மீனவர்கள் படுகின்ற துன்பம், உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இப்படியான பிரச்சினைகளுக்கு தான் சிறப்புப் பணிக் குழுக்களை அமைத்து தனது நேரடி மேற்பார்வையின் கீழ் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
தான் இலங்கையில் உள்ள அனைத்து இனங்களையும் அனைத்து மதங்களையும் நேசிப்பவன் என்றும் தான் ஒரு இனவாதி அல்ல என்பதையும் தமிழ் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே வரும் தேர்தலிலே தனக்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.