யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த
பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில்
ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது.
அப்பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம்
மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க
வைக்கப்பட்டிருந்தனர்.

மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை
இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம்
வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள்
,விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்
மற்றும் மீட்பு பணியாளர்கள் ,வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள்
சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம்
மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில்
மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன்
ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர்
ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை
துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட
அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி
கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

