இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும்,
ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பல பேரிடர்களுக்கு
மூல காரணமாகும் என வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப்
பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர்
தெரிவித்துள்ளார்.
நீர் பாதுகாப்பு
இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,
நீர் பாதுகாப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் ”WASPAR திட்ட ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும்.

காலநிலை மாற்றம் இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அண்மைய காலங்களில் ஒரே மாதத்தில் கொட்டித் தீர்க்கும் மழை, அடுத்த மாதமே
வாட்டி வதைக்கும் வறட்சி என நாம் இதுவரை கண்டிராத அனர்த்தங்களைச் சந்தித்து
வருகிறோம்.
இதனை ‘இயற்கையின் கோபம்’ என்று கடந்து செல்வதை விட, ‘இயற்கையை நாம் கையாளத்
தவறியதன் விளைவு’ என்று புரிந்து கொள்வதே சிறந்தது.
வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும்,
ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பல பேரிடர்களுக்கு
மூல காரணமாகும்.
யாழ். குடாநாடு ஒரு தீவுப் பகுதி. எமக்கு ஆறுகள் இல்லை என்று கருதப்பட்டாலும்,
மழைநீரை கடலுக்குக் கொண்டு சேர்க்கும் அதேவேளை, நிலத்தடி நீரைச் செறிவூட்டும்
வழுக்கையாறு போன்ற இயற்கையான வடிகால்கள் எமக்கு உண்டு” என தெரிவித்துள்ளார்.



