வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் அவலத்தில் மட்டுமே
தொடங்கியதல்ல. ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்ட அநீதி என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்
சங்கம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் தினத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவி செயஸ்டியான் தேவி மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
பக்கச்சார்பற்ற சர்வதேச நீதிமுறை
“இலங்கையின் வடக்கு கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்களாகிய நாங்கள், உலகளவில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான காணாமல்
ஆக்கப்பட்டவர்களை கொண்ட நாடாகிய இலங்கையில், நீதி பெறுவதற்கான போராட்டத்தை
பக்கச்சார்பற்ற சர்வதேச நீதிமுறை மூலம் முன்னெடுத்து வருகிறோம்.

இந்த சர்வதேச
மனித உரிமைகள் தினத்தில். பாகுபாடற்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என சர்வதேச
சமூகத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம்.
வலுக்கட்டாய காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்கால் படுகொலையில் மட்டுமே
தொடங்கியதல்ல ஈழத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திலிருந்தே
இலங்கை அரசு இதை திட்டமிட்ட இன ஒடுக்குமுறை கருவியாகப் பயன்படுத்தி
வந்துள்ளது.
அடைக்களம் கோரிய முகாம்கள்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீடுகளில் இருந்தும், அடைக்களம்
கோரிய முகாம்களில் இருந்தும் பாடசாலைகள் செல்லும் வழிகளிலும் தொழில் செய்யும்
இடங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
2009இல் முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்த போரின் இறுதிக்கட்டத்தில்
மட்டும் 146,679 பேர் கொல்லப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளனர்.
மேலும்,
21,000 க்கும் மேற்பட்டோர் இலங்கை பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டபின்
காணாமல் ஆக்கப்பட்டனர் இவர்களில் பெண்கள் உட்பட, 59 சிறுவர்கள் அடங்குவர்.
போருக்குப் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக, நீதிக்காக போராடும் 350 க்கும் மேற்பட்ட
உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை அறியாமலே உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்கள் காணாமல் ஆக்கப்படுவதில் இலங்கை உலகில் முன்னணியில் உள்ளது. ஐக்கிய
நாடுகள் சபை இலங்கை அரசுக்கு திருப்திகரமான காலவகை வழங்குவது எங்களுக்கு
ஆழ்ந்த வேதனையாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.
செய்தி – தொம்சன்



