கணேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றதாக இஷாரா செவ்வந்தியின் மாமா தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே இஷாரா செவ்வந்தியின் மாமா இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இஷாரா செவ்வந்தி எனது இரண்டாவது சகோதரியின் மகள், அவருடைய தாய்க்கு மற்றுமொரு நபருடன் தொடர்பு இருந்தது.
போதைப்பொருள் குற்றச்சாட்டு
அவருடன் 2024 ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் இஷாரா செவ்வந்தியும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் தான் இஷாரா செவ்வந்தியின் வாழ்க்கை மாற்றமடைந்தது.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் அதிகமாக வீட்டில் தங்குவதில்லை .நண்பர்கள் மற்றும் அயலவர்களுடைய வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய சகோதரரும் சித்தப்பாவும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்க்க செல்வதாக கூறி செவ்வந்தி தொடர்ந்தும் வீட்டில் இருந்து செல்வார்.
பணம் எவ்வாறு கிடைத்தது
அச்சந்தர்ப்பத்தில் அவரிடம் அதிக பணம் இருந்தது. ஆனால் அந்த பணம் எவ்வாறு அவருக்கு கிடைத்தது என்பது தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி அவர் கூறுவதும் இல்லை.
இதே வேளை விளக்கமறியலில் இருந்த போது கெஹேல் பத்தர பத்மேவை சந்தித்துள்ளதாக இஷாரா கூறியிருக்கிறார். பத்மே என்பவர் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.
ஆனால் பத்மே தொடர்பில் இஷாரா அடிக்கடி பேசியதுண்டு. அவரது வீட்டுக்கும் சென்றுள்ளார். அவருடைய குடும்பத்தினருடன் நெருங்கி பழகியும் உள்ளார் என செவ்வந்தியின் மாமா தெரிவித்தார்.
தொழில் எதுவும் கிடைக்கவில்லை
மேலும்,
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வெளிநாட்டுக்கு செல்வதாக வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரிடமும் தெரிவித்து விட்டு அவர் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
மஞ்சள் நிற சிற்றூர்ந்து ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றனர். அதற்கு பின்னர் அவருடனான எங்களது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
அவர் வீட்டில் இருந்து சென்று பல நாட்களுக்கு பின்னர் தான் ருமேனியாவில் தங்கியிருப்பதாகவும், தனக்கு இன்னும் தொழில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் செவ்வந்தி கூறியதாக அவரது மாமா தெரிவித்தார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
எனினும் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பான செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப்பட்டவுடன் உடனடியாக நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன். வெளிநாட்டுக்கு செல்வதாக கூறி அவர் இவ்வாறான தொழில் ஈடுபட்டிருப்பதை நான் அறிந்துக் கொண்டேன்.
அன்றைய தினமே மினுவாங்கொடை காவல்துறையினர் எங்களது வீட்டுக்கு வந்தனர். அதன்போது தனது சகோதரியையும், செவ்வந்தியின் சகோதரரையும் வாக்குமூலம் வழங்க அழைத்து சென்றனர்.
செவ்வந்தி சிறுவயது முதல் எவ்விதமாக வேலைகளையும் செய்வதில்லை. அவள் மிகவும் மென்மையானவள், நாய்குட்டி வளர்த்தல், பூந்தோட்டம் அமைத்தல் என சிறிய வேலைகளை மட்டுமே அவர் செய்து வந்ததார் என்றார்.