அரசாங்கத்தில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை எனவும் மீண்டும் ஒரு 2022ஆம் ஆண்டுக்கு முகம் கொடுக்க முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கூட்டு நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்றிருந்த இராமநாதன் அர்ச்சுனா வெளியில் வந்து ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறைமையை கொண்டுள்ள எமது நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சை அமைச்சர் ஒருவர் மறுதலித்து பேசுவது, சம்பிரதாயத்தை மீறும் செயற்பாடாகும்.
வீணடிக்கப்பட்ட நம்பிக்கை
நாம் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதம் ஒன்றை கோரவுள்ளோம். வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தனது கூற்றை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தோடு சிரேஷ்டத்துவத்திற்கு மதிப்பளித்திருக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பியின் உட்கட்சி பூசலை நாடாளுமன்றத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுவது சிறுப்பிள்ளைத்தனமானது. ஆனால் அதை நாடாளுமன்றில் தீர்த்துக் கொள்ள முனைவதும் தவறானதாகும்.
நாட்டின் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் நாடாளுமன்றில் தான் கூறுவது அனைத்தும் பொய் என்று சொல்வதென்றால் இருபது வருடங்களாக பொய்தானே கூறியுள்ளார்.
நானும் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவுக்கே வாக்களித்தேன். மக்கள் பெரும் நம்பிக்கையிலேயே வாக்களித்தனர். அந்த நம்பிக்கை வீணடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போதைக்கு அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முரண்பாடு ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், இந்த முரண்பாட்டைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – ஹஸ்ரப்