இலங்கையில் தற்போதுள்ள அனர்த்த நிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய
நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று (30) தனது அவசரகால ஒருங்கிணைப்புப் பொறிமுறையைச்
செயற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுடன் இணைந்து ஒரு பல்துறைத் தேவைகள்
மதிப்பீட்டை மேற்கொள்ளவும், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், நீர், கல்வி,
பாதுகாப்பு, தங்குமிடம், மற்றும் ஆரம்பகால மீட்சி போன்ற முக்கியத் துறைகளில்
உள்ள தேவைகளை ஒருங்கிணைக்கவும் ஐ.நா. சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நிவாரணப் பணி
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF), அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட
பகுதிகளை அணுகுவதில் உள்ள சவால்களுக்கு மத்தியிலும், வெள்ளம் மற்றும்
உள்கட்டமைப்புச் சேதம் காரணமாக மற்ற பகுதிகளிலிருந்து இணைப்பு
துண்டிக்கப்பட்டிருந்த பதுளை மாவட்டத்தின் 25 பாதுகாப்பு மையங்களுக்கு
அத்தியாவசியமான குடிநீரை விநியோகம் செய்துள்ளது.

தேசிய மீட்பு மற்றும் ஆரம்பகால மீட்சி முயற்சிகளுக்கு ஐ.நா. குழுக்கள் முழு
ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்
மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்சே உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக, நட்பு
நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியனவும் உடனடியாகக் களமிறங்கியுள்ளன.
இந்ந நாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இலங்கை
முப்படைகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தமது
அவசரக் குழுக்களை அனுப்பியுள்ளன.

