தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியில் இருக்கின்ற 15 இராணுவத்தினரை வெளியேற்றி மாவீரர் நாளை சிறப்பாக அனுஷ்டிக்க இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் என்பது வித்துடல்கள் விதைக்கப்பட்ட இடமாகும். அங்கு 15 இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதால் நாங்கள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தான் நினைவேந்தலை முன்னெடுக்கின்றோம்.
வணக்கஸ்தலங்களை விடுவிக்க வேண்டும்
துயிலும் இல்லத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் 2020ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கல் போடப்பட்டுள்ளது. வருகின்ற ஜனாதிபதிகள் தேர்தல் காலங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தடையில்லை என்று கூறுகின்றனர்.
அநுர ஜனாதிபதியாக வரும் போதும் பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இன்று அமைதியாக இருக்கின்றார். ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகியும் எந்த ஒரு மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்தும் இாணுவத்தினரை வெளியேற்றவில்லை.

தயவு செய்து எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த இந்த இடத்தை விடுதலை செய்ய வேண்டும்.
வடக்கு கிழக்கிலே திசைகாட்டிக்கு வாக்களித்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ள நிலையில் அநுர அரசாங்கம் வணக்கஸ்தலங்களை விடுவிக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

