கடந்த வருடம் இதே தினம்(17.09.2023) திலீபன் வாரமானது வடக்கு – கிழக்கு எங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. இதுவே அனைத்து தமிழ் ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியிருந்தது.
இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட தியாக தீபம் திலீபனின் 36(2023) ஆம் ஆண்டு நினைவேந்தல் பல சிறப்புக்களையும், பேரினவாதத்தின் கருப்பு புள்ளிகளையும் கொண்டிருந்தது.
இதன்போது கடந்த வருடம் யாழ்ப்பாணம் நல்லூரின் பக்கமே அரசியல் தலைமைகளின் பிரசன்னங்களும்,
பிரதிபலிப்புக்களும் காணப்பட்டது.
ஆனால் இன்று அந்த உணர்வெழுச்சியினை இலங்கை அரசியல் முடக்கிவிட்டதா என ஆதங்க கேள்வி எழுகிறது?
தமிழ் தேசியம்
எல்லா பக்கமும் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் தேசியத்துக்குள்ளும், அதன் உணர்வுகளுக்குள்ளும் இலங்கை அரசியலின் பிம்பம் உள்நுழைந்து இருட்டடிப்பு செய்கின்றதா என கேள்வி எழுகிறது?
ஒவ்வொரு வருடமும் திலீபன் வாரம் என்றால், வடக்கு – கிழக்கில் உணர்வெழுச்சி கோலம் பூண்டு சிவப்பு மஞ்சள் வர்ண நினைவு அலங்காரங்களால் அலங்கரிக்கப்படும்.
மூளை முடுக்கெல்லாம் திலீபனுக்கு நினைவேந்தல் நடைபெற்று தமிழ் தேசியத்தின் உணர்வு வெளிப்படுத்தப்படும்.
ஆனால் இந்த வருடம் திலீபன் வாரத்தினை தேர்தல் வாரம் மறைத்துவிட்டது எனலாம்.
வடக்கு கிழக்கு எங்கும் கட்சி கொடிகளும், கட்சி அலுவலகங்களும் இன்று காட்சியளிக்கிறது.
இலங்கையில் இன்னும் 4 நாட்களில் அரச தலைவரை தெரிவு செய்யும் ஒரு முக்கிய போட்டியான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
அனைத்து கட்சிகளும், தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்டுவிட்டனர்.
ஈழ தமிழர்களின் முக்கிய அரசியல் அங்கமான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தென்னிலங்கையின் பக்கம் தனது ஆதரவை வெளிப்படுத்திவிட்டது.
ஆனால் கடந்த 36 வருடங்களாக ஈழத்தமிழர்களின் உணர்வோடு கலந்த தியாக தீபத்தின் நினைவு வாரத்தை தேர்தல் வாக்கு எனவும் வேட்கை மறைத்து விட்டது எனலாம்.
தேர்தல் பிரசார மேடை
தமிழ் தேசியத்திற்காக அரசவையில் அமர்ந்த அரசியல் தலைமைகள் அனைத்தும் இன்று, தேசிய உணர்வு எனும் இலக்கை மறந்து தேர்தல் பிரசார மேடைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
தென்னிலங்கை வேட்பாளருக்கு ஒரு தரப்பும், தமிழ் பொது வேட்பாளருக்கு ஒரு தரப்பும், தேர்தலே வேண்டாம் என தனிவழியில் நடக்கும் ஒருதரப்பும் செப்டம்பர் 21ஐ நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்த ஓட்டத்தால் எமது உணர்வுகளை அவை கடக்க செய்துவிட்டன.
தியாக தீபம் என பெயர் வர திலீபன் செய்த தியாகங்கள் வரலாற்றில் இடம்பிடித்த எழுதப்படாத கல்வெட்டு ஆவணம் எனலாம்.
12 நாட்கள் நீராகாரம் இன்றி இருந்து தனது இலக்கை அடைந்து தன் இன மக்களுக்கு நீதிக்காக உயிர்நீத்த ஓர் உன்னத தலைமை.
அகிம்சையில் மகாத்மா காந்தியை விட திலீபன் உயர்ந்தவரா என்ற அக்கால இந்திய அரசின் கேள்விகளுக்கு, மகாத்மா காந்தியின் சுயசரிதையே பதிலானது.
சத்திய சோதனையில் ஒரு வரியில் மகாத்மா காந்தி, ” இளவயதில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தனிமையை தான் தேடி சென்றேன்” என கூறியுள்ளார்.
ஆனால் தனது 23 ஆவது வயதில், அனைத்து உணர்வுகளையும் தகர்த்தெறிந்து தமிழ் தேசியத்தை மாத்திரம் நல்லூரில் உணர்வாக்கி மேடையேறி, வெளிநாட்டு படை எம் மண்ணில் நிலைகொள்ள அனுமதியேன் என போராடிய ஒருவரே தியாக தீபம் திலீபன்.
ஐந்து அம்ச கோரிக்கை
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் ஐந்து அம்சங்களை கொண்டமைந்திருந்தது.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தனது ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அவர்.
1) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளேயே திலீபன் முன்வைத்தார்.
12 நாட்கள் போராட்டம்
இந்த கோரிக்கைகளின் போராட்டம், 12 நாட்கள் தொடர்ந்தது.
முதல் நாள் போராட்டம் தொடங்கிய அன்று திலீபன் மேடை ஏறி உண்ணாவிரத போராட்டத்தைப் பற்றிய விளக்க உரை கொடுத்துவிட்டு, அவர் வாசிப்பதற்காக சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தன்னிடம் வைத்திருந்தார்.
மேலும் அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.
இரண்டாம் நாள் அதிகாலை திலீபன் எழுந்து சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு மேடை ஏறினார். உடல் சக்தி விரயமாகும் என்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்தினார். அன்றும் பிரபாகரன், திலீபனை சந்தித்தார்.
மூன்றாம் நாள் திலீபன் விழிக்கும் போதே தண்ணீர் வற்றி உதடுகள் வெடிப்படைந்திருந்தன. மேலும் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
மருத்துவ சோதனைக்கு மறுத்துவிட்டார்.
நான்காம் நாள் திலீபனால் படுக்கையைவிட்டு எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டும் அவரால் சிறுநீர் கழிக்க முடியாமல்போனது.
ஐந்தாம் நாள் அவரால் எழவே முடியவில்லை. சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கியது. இந்திய சமாதானப்படையினரின் யாழ். கோட்டை இராணுவ கர்னல் அவரை சந்தித்து பேசிவிட்டு, மேலிடத்தில் பேசுவதாக கூறியுள்ளார்.
ஆறாம் நாள் திலீபனால் பேசமுடியாமல் போனது.
ஏழாம் நாள் இந்திய பத்திரிகைகள் இலங்கைக்கு வந்தபோது திலீபன் “எந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்” என்றார்.
எட்டாவது நாள் அவருடன் சேர்ந்து பொது மக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்கள்.
ஒன்பதாவது நாள் திலீபனால் கண் திறக்கமுடியவில்லை. அன்று இந்தியத் தூதுவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் இடையே இரண்டுகட்டமாக பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது.
பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி, நாடித்துடிப்பு நிமிடத்திற்கு 52 எனவும், இரத்த அழுத்தம் 80/50 எனவும் இருந்தது.
அவர் அன்று “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன்” என்றார்.
பதினோராவது நாள் உடல் அசைவற்று இருந்தார் திலீபன். அவருக்கு மிகவும் பிடித்த பாடலான “ஓ மரணித்த வீரனே! உன் ஆயுதங்களை எனக்குத்தா. உன் சீருடைகளை எனக்குத்தா” என்ற பாடலை அங்கிருந்தோர் பாடினார்கள்.
அவர் வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், பனிரெண்டாவது நாள் காலை 10.48 மணிக்கு அவர் ஒரு சொட்டு தண்ணீர், ஒரு பருக்கை உணவு என எதையும் உட்கொள்ளாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்துகொண்டு வீர மரணம் அடைந்தார்.
தமிழ் அரசியல் தலைமைகள்
இங்கு மரணித்தது திலீபன் மாத்திரம் அல்ல. தமிழ் தேசியத்தின் கோரிக்கையும்தான்.
இந்த மரணத்தின் பின்னர் தாயகமெங்கும் கடந்த 36 ஆண்டுகளாக நீங்காது நிலைத்துநின்ற அவரது நினைவேந்தல் இந்த வருடம்(37) அமைதி பெற்றுள்ளது.
ஒரு வகையில் பார்க்கப்பொன்னால் தமிழ் அரசியல் தலைமைகள் தனது அரசியல் விம்பத்தை பறைசாற்ற வருடா வருடம் திலீபன் வாரத்தை உபயோகித்து கொண்டனரா என கேள்வி எழுகிறது.
இந்த வருடம் தேர்தல் வந்து விட்டதால் அவர்களின் விம்பத்தை பிரதிபலிக்க அதை பயன்படுத்திக்கொண்டனரா என ஆதங்கம் வெளியாகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் இவர்களுக்கு தனது நோக்கத்தை அடைய முன்வராததால் இறுதி பொது தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை அவர்களில் சிலரை வீட்டுக்கு அனுப்பியது.
அதன் தாக்கத்தை இல்லாது செய்ய இவர்கள் மக்கள் முன் தனது முகங்களை மறக்க விடாமல் செய்ய தேசியத்தின் மீதுள்ள பற்று என்ற போர்வையில் இவ்வாறு செயற்பட்டனரா என கேள்வியும் எழுகிறது.
அடுத்த தலைமுறைக்கு தமது நினைவுகளை கடத்துவதற்கு பதிலாக அவற்றை கடந்து செல்லும் போக்கு கலவலையளிக்கின்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் கடந்த 36 வருடமாக நினைவேந்த பட்ட தியாக தீபத்துக்கான விளக்குங்கள் இந்த முறை குறைந்துள்ளமை, தேசிய உணர்வின் பின்னடைவு எனவும் கூறப்படுகிறது.