இலங்கையின்(Sri lanka) பல பகுதிகளில் இன்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை
காணப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும்
நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம்
அறிவித்ததைத் தொடர்ந்து எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத தள்ளுபடியை இரத்துச் செய்ய
கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.
எரிபொருள் கொள்வனவு
இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் விநியோகத்தர்கள்
சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும்
நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மாந்துறை
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (1) காணப்பட்டுள்ளனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை அடுத்து பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் இன்று முதல் புதிய எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
இதனால் இன்று சம்மாந்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை என்று அறிவித்தல் போடப்பட்டிருந்தது.
சம்மாந்துறை பகுதியில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகன சாரதிகள் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண நகர் பகுதி, தாவடி, மருதணார்மடம், உடுவில் போன்ற பகுதிகளில் உள்ள
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க
முடிந்தது.
அத்தோடு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்: ராகேஸ், தீபன்