நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை தற்போது சமூக ஊடகங்கள் உட்பட பல செய்தித்தளங்களிலும் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில், இலங்கையில் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஆளும் கட்சியினருக்கு 60 வீதமும் எதிர்கட்சியினருக்கு 40 வீதமும் என்ற அடிப்படையில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிட்டமையினால் அவருக்கான நேர ஒதுக்கீடு எதிர்கட்சியினரின் நேர ஒதுக்கீட்டில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் (Sajith Premadasa) உரையாட எதிர்கட்சி அலுவலகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சென்றிருந்த போது அவர் மீது எதிர்கட்சியினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பில் முன்னாள் சபாநாயக்கரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முறைப்பாடு அளித்த போது இது குறித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுவொன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது இது குறித்தும் மற்றும் தனக்கு குறித்த நேர ஒதுக்கீடு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, புதிய சபாநாயக்கரிடம் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், புதிய சபாநாயகர் அர்ச்சுனாவிற்கான நேர ஒதுக்கீடு செய்யாமை குறித்து பதிலளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இவ்வாறான பிண்ணனியில் டிசம்பர் 18 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை எதிர்கட்சி தலைவர் இது குறித்து எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என நேற்றைய தினம் (06) தனது உத்தியோகப்பூர்வ யூடியூப் தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடரான இன்று (07) நாடாளுமன்றில் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதாவது, இன்று வரை தனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழக்கப்படவில்லையெனவும் இது குறித்து தனக்கு எவ்வித பதிலும் தற்போது வரை வழங்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
யாழில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் தனக்கு சரியான பதிலை தற்போது வரை எதிர்கட்சி தலைவர் உட்பட யாரும் வழங்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள போதிலும் எனக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை ஆகவே தனக்கு சரியான பதிலை பெற்றுதருமாறு அவர் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
இந்தநிலையில் இதற்கு பதிலளித்த சபாநாயக்கர், இது தொடர்பில் எதிர்கட்சி தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அத்தோடு இது தொடர்பில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/UVk7gzmgfMQ?start=85