ஹபரணை, ஹுருலு பூங்காவிற்கு அருகில் பல நாட்களாக காலில் காயம் ஏற்பட்டு கடுமையான வலியால் துடிக்கும் குட்டி யானை குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஹபரணை நகருக்கு அருகில் சஃபாரி ஜீப்புகள் இயங்கும் சாலைகளுக்கு அருகில் வந்ததால் இந்த காட்டு யானைக் குட்டி வலியால் துடிப்பதை கண்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வீதியில் செல்பவர்களிடம் உதவி கேட்கும் குட்டி யானை
இந்த நிலையில் அவதிப்படும் குட்டியைப் பாதுகாக்க பல காட்டு யானைகள் கூட்டமாகப் போராடி வருவதாகவும், சிகிச்சை தேவைப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்களிடம் உதவி கேட்பது போல் அந்த விலங்கு நடந்து கொள்வதாகவும் சுற்றுலாப் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து மின்னேரியா வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் மருத்துவர் இல்லை என்று கூறி சிகிச்சை பெற முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
சிகிச்சை அளிக்க வராத மருத்துவர்கள்
மேலும், குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வருவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தும், 6 ஆம் திகதி மதியம் எந்த மருத்துவரோ அல்லது வனவிலங்கு அதிகாரியோ வராதது குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

மின்னேரியா தேசிய பூங்கா, கௌடுல்லா தேசிய பூங்கா, ஹுருலு தேசிய பூங்கா, எனப் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் யானைகளைப் பார்க்க வருகை தரும் பகுதிகள் ஆகும்.
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ஒரு கால்நடை மருத்துவர் இல்லாதது ஒரு கடுமையான பிரச்சினை என்று சுற்றுலாப் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், இந்த யானைக் குட்டியின் முன் காலில் இரும்பு கம்பி இணைக்கப்பட்டிருப்பதால், கால் பெரிதும் வீங்கி, அதனால் நடக்க முடியாமல் , கடுமையான வலி ஏற்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் குட்டி யானையின் உயிரை அவசரமாகக் காப்பாற்றுமாறு வனவிலங்கு அதிகாரிகளிடம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

