புதிய இணைப்பு
அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட
வருகின்ற பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில்
பெய்த அடை மழை காரணமாக நாடு பூராகவும் வெள்ள நிலை ஏற்பட்டு அதிகளவான மக்கள்
பாதிக்கப்பட்டிருந்ததுடன் இடைத்தங்கல் முகாமாக செயற்பட்ட பாடசாலைகளில் தங்கி
இருந்து பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதேவேளை சில இடங்களில்
பொதுமக்கள் குழுவாக பயணம் செய்து பொழுது போக்கிற்காக வெள்ள நீரை பார்வையிட
வருகை தந்த சந்தர்ப்பங்களையும் காண முடிந்தது.
அம்பாறை மாவட்டம் பல்வேறு
பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. அதில் கடந்த 26.11.2024 அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12
பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானதை யாவரும்
அறிந்ததே.
போக்குவரத்தை தடை செய்தல்
அங்கு திடீரென வருகை தந்த மக்கள் பிரதான போக்குவரத்தை தடை செய்யும்
வண்ணம் நடந்து கொண்டதுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களையும்
அசௌகரியத்திற்கும் உள்ளாக்கினர்.
குறித்த சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும்
போக்குவரத்து காவல்துறையினரோ ஏனைய பாதுகாப்பு தரப்பினரோ எதுவித நடவடிக்கை
எடுக்கவில்லை என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
சுமார் தினந்தோறும் 1000க்கும்
அதிகமானவர்கள் இவ்வாறு வெள்ள நீரை பார்வையிட வருகை தருகின்னர். எனவே இனியாவது உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தகுந்த
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அம்பாறை (Ampara) மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம்
வெள்ளத்தில் சிக்கிய விபத்தில் காணாமல் போன 7 பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட
நிலையில் இடைநிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இருள்
சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று என்பவற்றால் காணாமல் போன மாணவர்களை
தேடும் பணிகள் நேற்று (28) மாலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காணாமல் போன ஒரு மத்ரஸா
மாணவனின் சடலத்தை தேடி குறித்த மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
போக்குவரத்து நடவடிக்கை
தேடுதல் நடவடிக்கையில் கடற்படை, இராணுவம், விசேட
அதிரடிப்படை காவல்துறையினர் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள்
பேரவை, மாளிகைகாடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் காரைதீவு தமிழ் இளைஞர்கள்
அமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கல்முனை அம்பாறை பிரதான வீதியில் நீர்மட்டம் குறைந்து இருந்தால் மாத்திரம் வழமை போன்று அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி அளிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறைக்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மத்ரஸா மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் வெள்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.