கொழும்பு (Colombo) கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (15) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின் காரணமாக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் (Batticaloa) இருந்து கோட்டை நோக்கி பயணித்த மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்தின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து சேவை
இதன் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும் இடையிலான தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதான மார்க்கம் மற்றும் கரையோர மார்க்கத்தின் தொடருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தீ விபத்து
இதேவேளை தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் விரைவு தொடருந்தில் இன்று (15) காலை தீ விபத்து ஏற்பட்டது.
பின் எஞ்சினின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்த நிலையில் தொடருந்து நிலைய அதிகாரிகள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் தீ விபத்தினால் இயந்திரம் பாரியளவில் சேதமடையவில்லை எனவும் தற்போது தொடருந்து தெற்கு களுத்துறை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று (14) மஹவ தொடருந்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி தொடருந்தில் திம்பிரியாகெதர தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாகப் பிரதான மார்க்கத்தில் தொடருந்து போக்குவரத்தில் தாமதம் நிலவியதுடன், சீரற்ற காலநிலை காரணமாக தொடருந்து போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.