வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை
கைவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் சார்பில்
முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்த நிலையில் குறித்த வழக்கு
முடிவுறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன்
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வட மாகாண கல்வித் திணைக்களத்தினால்
மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதியை இடமாற்ற பட்டியலில் பாரபட்சம் மற்றும்
முறைகேடுகள் இருப்பதாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம்
தெளிவுபடுத்தியிருந்து.
குறித்த இடமாற்றப்பட்டியலை உரிய நடைமுறைகளை பின்பற்றி மீண்டும் மேற்கொள்ள
வேண்டும் என கோரிக்கை முன்வைத்த நிலையில் எமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
ஒன்று சேர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மூன்று
நாட்களாக மேற்கொண்டமை அனைவரும் அறிந்த விடயம்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
எமது நியாயமான கோரிக்கையை வடமாகாண ஆளுநர் நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லாத
காரணத்தினால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை ஏற்பட்டது.

நீதிமன்றத்தில் வடமாகாண கல்வி அமைச்சு வடமாகாண கல்வி திணைக்களம் உரிய
விளக்கங்களை உரிய காலப்பகுதியில் வழங்காத காரணத்தினால் வழக்கு இழுபடும் நிலை
ஏற்பட்டது.
இவ்வாறான நிலையில் திங்கட்கிழமை குறித்த வழக்கானது
விசாரணைக்காக திகதியிடப்பட்ட போதும் நீதிபதி விடுமுறையில் இருந்த காரணத்தினால் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மாகாண கல்வி திணைக்களம் வட மாகாண கல்வி அமைச்சு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வெளியிடப்பட்ட சேவையின் தேவை கருதிய இட மாற்றப் பட்டியலை கை
விடுவதாக மன்றுக்கு அறிவித்த நிலையில் வழக்கு நிறைவுக்கு வந்தது.
ஏற்கனவே நாம் கூறியது போன்று எமது நியாயமான கோரிக்கையை வடமாகாண ஆளுநர்
வைத்திருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவை இருந்திருக்காது.
ஆகவே ஆளுநரிடம் பெற வேண்டிய நீதியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

