புதிய இணைப்பு
மீண்டும் அதே இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த தேரர்கள் மற்றும் பெரும்பான்மை இன மக்கள் இணைந்து ஊர்வலமாக எடுத்து வந்து அந்த புத்தர் சிலையினை வைத்துள்ளனர்.
மேலும், பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே அந்த புத்தர் சிலை மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக அங்கு ஒன்று கூடிய மக்கள் உள்ளிட்ட பௌத்த பிக்குவினர் தெரிவித்துள்ளனர்.



முதலாம் இணைப்பு
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே களத்தில் பெருமளவான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த புத்தர் சிலையை அந்த இடத்திலேயே மீண்டும் வைப்பதற்கான முயற்சியை அங்கு கூடியுள்ள பௌத்த பிக்குகள் தற்போது தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

மேலும், பெரும்பான்மை இன மக்களும் அதிகமாக அவ்விடத்தில் ஒன்று திரண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தலைமையில் தற்போது அவசர கூட்டம் ஒன்றும் நடைபெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில், புத்தர் சிலையை அங்கு வைப்பதற்கு வலியுறுத்தும் தேரர்கள் குழுவொன்றும் அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
மேலும், நேற்று இரவு சம்பவ இடத்தில் நடந்த பரபரப்பான நிலை காரணமாக, பொலிஸாரின் கன்னத்தில் அறைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட இரண்டு பௌத்த பிக்குகள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாங்களாகவே இவர்கள் வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு பௌத்த பிக்குகளும் சம்பவ இடத்திற்கு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலகத்தில் நடைபெறும் கூட்டம் நிறைவுற்ற பின்னரே முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேற்று இரவ வைக்கப்பட்ட புத்தர் சிலை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ள நிலையில், அதனை மீளவும் வைப்பதற்கான முயற்சியை சில பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பெரும்பான்மை இன மக்கள் கைவிடவில்லை என்றும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த இடத்தில் ஒன்றுதிரண்டுள்ள பௌத்த பிக்குகள் சிலர் அந்த காணிக்குரிய உறுதிப் பத்திரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்து குழப்பத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 12, 2025: கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ
திணைக்கள அதிகாரிகளினால், ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்ட, சட்டவிரோத
கட்டுமானத்தை அகற்றுவதற்கான உடைத்தல் கட்டளை ஒட்டப்பட்டது.
நவம்பர் 4, 2025: திணைக்கள அதிகாரிகளால் சட்டவிரோத கட்டுமானங்கள் (3
கட்டிடங்கள்) அகற்றப்பட்டன.
நவம்பர் 15, 2025 (இரவு):குறித்த பகுதியில் இரவோடு இரவாக கட்டுமானப்
பொருட்கள் இறக்கப்பட்டு, பெயர்ப்பலகையும் நடப்பட்டது.
நவம்பர் 16, 2025 (காலை): புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும், கட்டுமானப்
பணிகளும் ஆரம்பமாகின.
நவம்பர் 16, 2025 (பகல்) :கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் திருகோணமலை
துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது. கட்டுமானத்திற்கு தடை
விதிக்கப்பட்ட போதும், வேலைகள் தொடர்ந்தன.
நவம்பர் 16, 2025 (இரவு): புத்தர் சிலை நிறுவப்பட்டது.
நவம்பர் 16, 2025 (நள்ளிரவு): பாதுகாப்புக் கருதி புத்தர் சிலை அகற்றப்பட்டு
கொண்டு செல்லப்பட்டது.
நவம்பர் 17, 2025 (காலை): பாராளுமன்றில் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன.
நவம்பர் 17, 2025 (முற்பகல்): மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது.
நவம்பர் 17, 2025 (நண்பகல் 12:00): மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான கூட்டம்
இடம்பெற்றது.
நவம்பர் 17, 2025 (மதியம் 1:30): பொலிஸாரினால் குறித்த இடத்தில் புத்தர் சிலை
மீண்டும் நிறுவப்பட்டது.




