நாடுதழுவிய போராட்டத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாக முத்துநகர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – முத்துநகர் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அரசிடம் இருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முத்துநகர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விவசாய காணி
முத்துநகர் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாய காணிகளில் இருந்து விவசாயிகளை வெளியேற்றி அவற்றை சோலார் மின் திட்டத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது காணிகளை தமது விவசாயத்திற்கு மீள வழங்குமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான தீர்வை வழங்குவதாக விவசாயிகளுடனான கலந்துரையாடலின்போது அரச தரப்பில் இருந்து உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே குறித்த விவசாயிகள் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் விவசாயிகள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இது முத்துநகர் விவசாயிகளுக்கு மாத்திரம் உரிய பிரச்சினை அல்ல.
மாறாக இது விவசாய நிலங்களில் சோலாரை பூட்டி அவற்றை மலட்டு நிலங்களாக மாற்றுவதால் பாதிப்படைகின்ற விவசாயினதும், அரிசியை உணவாக உட்கொள்ளுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய பிரச்சினையுமாகும்.
நாங்கள் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கோ அல்லது நாட்டின் அபிவிருத்திக்கோ எதிரானவர்கள் அல்லர்.
சட்ட நடவடிக்கை
மாறாக பொன் விளையும் பூமியான விவசாயம் மேற்கொள்ளுகின்ற பூமியில் சோலார் மின் திட்டத்திற்கான தொகுதிகளை பூட்டி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ளவிடாது அவற்றை மலட்டு நிலங்களாக மாற்றுவதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.
அருகில் உள்ள கரைச்சி நிலங்களை சோலார் திட்டத்திற்காக எடுத்துக் கொண்டு எமது நிலங்களை விவசாயம் செய்ய எம்மிடம் தாருங்கள் என்றே கேட்கின்றோம்.
இதேவேளை நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட சிக்கல் இல்லாத காணிகளில் விவசாயம் மேற்காள்ள முடியும் என்ற தீர்மானத்தினை 29.07.2025 அன்று மேற்கொண்டிருப்பதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிக்கை வெளியிட்டிருப்பதை ஊடகவாயிலாக அறிந்தோம்.
இருப்பினும், அது தொடர்பாக ஆவண ரீதியான எவ்வித உத்தரவாதமும் எமது விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
அத்துடன் எமது முத்துநகர் பகுதியில் ஆறிற்கும் மேற்பட்ட சோலார் கம்பனிகள் கால்பதிக்கவுள்ளதாக அறிகின்றோம்.
அதுமட்டுமல்லாமல் 352 விவசாயிகளையும் வெளியேற்றுவதற்கான சட்ட நடவடிக்கை இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விவசாயிகளின் கோரிக்கை
இவ்வாறான நிலையில் ஏனைய காணிகளில் இருந்தும் நாம் சட்டரீதியாக வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கின்றோம்.
எமது 352 விவசாயிகளும் 800 ஏக்கரில் காலாகாலமாக விவசாயம் செய்து வருகின்றார்கள் அவற்றை எமக்கு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
இந்நிலையில் இதுவரை நீதிமன்ற கட்டளையின் மூலம் வெளியேற்றப்பட்டவர்களுக்கு மாற்றுக் காணியும், ஏனையவர்கள் அச்சம் இன்றி விவசாயம் மேற்கொள்ள சட்ட ரீதியான ஆவணம் ஒன்றையும் வழங்க பிரதி அமைச்சர் ஆவணை செய்ய வேண்டும்.
எமது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் இலங்கை முழுவதும் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி பாரிய போராட்டத்தை நடாத்தி அரச இயந்திரத்தை முடிக்குவதற்கும் நாம் தயாராக இருகின்றோம்.
கடந்த கால அரசாங்கமும் விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொள்ளாது செயற்பட்டதனாலேயே பாரிய பின்னடைவை எதிர்கொண்டது என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
எனினும், இந்த அரசாங்கத்தை நாங்களே கொண்டு வந்திருக்கின்றோம் எனவே எமது கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிமடுப்பார்கள் என முழுமையாக நம்புகின்றோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.