Courtesy: H A Roshan
அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக கிண்ணியாவில் பல ஏக்கர் வேளாண்மை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சோலை வெட்டுவான், மயிலப்பஞ்சேனை, கண்டக்காடு முதலான பகுதிகளில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மை மழை, வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கி அழிந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இப்பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இங்கு செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகளை விட புல் அதிகமாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிக பாதிப்புக்கள்
விவசாயத்தை நம்பி வாழும் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு அரசாங்கம் இதற்கான கவனம் செலுத்தி இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் விவசாயி ஒருவர், “வேளாண்மைக்கு பதிலாக புல் விளைந்து இருக்கின்றது. இன்று தேங்காயின் விலை அதிகம், பச்சை மிளகாய் விலை அதிகம், அரிசியின் விலை அதிகம், எங்களால் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரிசி வாங்கினால் கறி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேளாண்மைக்கு பதிலாக வைக்கோல் மாத்திரமே மிஞ்சி உள்ளது. இதற்கு அரசாங்கம் இழப்பீடு தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண்மை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. இதனை வெட்டி எடுத்தால் பத்தாயிரம் ரூபாய் கூட வராது. 15,000 ரூபா அறுவடை இயந்திரத்திற்கு கொடுக்க வேண்டும். மீதமாக உள்ளது என்ன? நாட்டில் அரிசியின் விலை 340 ரூபாய் எங்களால் வாழ முடியாது அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்.
கங்கையை சுற்றியுள்ள பகுதியை வெள்ளம் வராத அளவுக்கு தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டும் எனவும் குறித்த விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.