புலம்பெயர் மக்களினுடைய வேண்டுகோளுக்கு இணங்கியே அரசாங்கம் திருகோணமலை சிலையை அகற்றியுள்ளதாக அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரத்தின் போது காவல்துறையினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படக்கூடிய தேரர்களின் உடல் நலத்தை விசாரிக்க சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் விகாரையை அமைத்தது போல தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத கட்டுமானம்
இந்நிலையில், கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்க முற்பட்டவேளை பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சியே புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்ட நடவடிக்கை என கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் விளக்கத்தை வெளியிட்டிருந்தது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை இத்துடன் நிறுத்தவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்கள் எதையும் செய்யக்கூடாது எனவும் திருகோணமலை தலைமை நீதவான் நேற்று (19.11.2025) விகாராதிபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், நாளைய தினம் (21.11.2025) நுகேகொடையில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை நிறுத்தும் நோக்கில் அரசாங்கம் திருகோணமலை சம்பவத்தை பயன்படுத்தி வருவதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

