இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் விதித்துள்ள 20 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது, மின்சார வாகனங்கள் உட்பட அமெரிக்க வாகனங்களை இலங்கை சந்தையில் வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையை இலங்கைக்கு பயனளிக்கும் வகையில் குறைக்க அமெரிக்கா இந்தத் திட்டத்தை முன்வைத்ததாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவின் வரி
எனினும் அமெரிக்காவின் இந்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக அங்கீகரிக்கவில்லை. மேலும் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை பரிசீலிப்பதாக இலங்கை அரசாங்கம் அமெரிக்க தரப்புக்கு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் வரியின் கீழ் இலங்கை மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட 20 சதவீத வரியை குறைக்க அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி வரி
வரியை குறைப்பதற்கான சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக, டிரம்பினால் ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட 44 சதவீத வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை குறைக்க எந்தவொரு இணக்கப்பாடோ ஒப்பந்தங்களோ மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.