தவெக மாநாட்டில் விஜய் (Vijay) கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தம் எனக் கூறியதை வரலாறு தெரியாத அரசியல் நோக்கத்துடனான ஏமாற்று நாடகமாக என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் கச்சதீவு குறித்த கருத்துகளை யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவு இலங்கை – இந்திய ஒப்பந்தங்களால் இலங்கையின் பகுதியாக உள்ளதாகவும், அதை மீட்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருப்பதாகவும் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சு வேடிக்கையானது
இந்திய அரசு சீனாவிடம் நிலத்தை இழந்து மீட்க முடியாத நிலையில், கச்சதீவு குறித்த பேச்சு வேடிக்கையானது எனவும் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடித்தொழில் காரணமாகவே கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்வதாகவும், இதற்கு கச்சதீவு தீர்வாகாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் கச்சதீவு கருத்து, தமிழக கடற்றொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் உத்தியாகவே உள்ளதாகவும், இதற்கு பதிலாக சட்டவிரோத மீன்பிடிப்பை நிறுத்துவதற்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.