கடலிலிருந்து கரையொதுங்கிய போத்தலில் இருந்த அடையாளம் காணப்படாத திரவத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம், நாரக்கல்லிய பகுதியில் உள்ள ஒரு கடற்றொழிலாளர்களின் வாடியில் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், கடலில் மிதற்து வந்து கரையொதுங்கிய போத்தல் ஒன்றை இனங்கண்டுள்ளனர்.
பின்னர் அதில் காணப்பட்ட அடையாளம் காணப்படாத திரவத்தை அருந்தியுள்ளனர்.
இருவர் வைத்தியசாலையில்
அடையாளம் தெரியாத திரவத்தை குடித்த சிறிது நேரத்திலேயே ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் சிகிச்சைகளுக்காக அப்பகுதிவாசிகளால் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும், இருவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மர்ம திரவம்
இதேவேளை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியிருந்தது.

ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற ஐந்து கடற்றொழிலாளர்கள் கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த நச்சு திரவ கரைசலை மதுபானம் என நினைத்து அருந்திய பின்னர் உயிரிழந்தனர்.
மேலும், தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமான இந்த மர்மமான திரவம் என்ன என்பதைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

