இலங்கையில் எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதனைச் செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் மாவட்ட செயலகத்தில் நேற்று (07) நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சேதமடைந்த அனைத்து வீதிகள்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”புதிதாக உருவாக்கவுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காகத் தனிப்பிரிவு நிறுவ எதிர்பார்க்கின்றோம். அதன் கீழ் அனுமதியற்ற கட்டுமானங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகள் காண முடியும்.

குருணாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் பாவனைக்கு திறக்க வேண்டும்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துவதுடன் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக்கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்க வேண்டும். அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை பண்ணைகள்
இதேவேளை, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த துல்லியமான தரவுகளைப் பராமரிக்க வேண்டும்.

அத்துடன், தற்போதுள்ள சட்டங்கள் அதற்கு போதுமானதாக இல்லாவிட்டால், அந்தச் சட்டங்களை வகுக்க வேண்டும்.
மேலும், கால்நடை பண்ணைகள் முறையாகப் பதிவு செய்யப்படாததால் இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுகின்றன” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

