நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மலையக தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்இன்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதாலேயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து மண்ணை அகற்றுவதற்காக தொடருந்து திணைக்கள பணியாளர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சேவைகளை மீண்டும் தொடங்குதல்
அதன்படி, விரைவில் தொடருந்து சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் தொடருந்து மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த தொடருந்து ஆகியவை தொடர்புடைய பாதைகள் வழமைக்கு திரும்பும் வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.